Tuesday, May 3, 2011

O KOEL THAT MELTS THE GOLDEN EVENING !

பொன் மாலை உருக்கும் கருங்குயிலே !


தைத்ததுவோ பருவ நெஞ்சுள் கூர்முனைக் காதல் முள் ?

ஆங்குக் கசிந்து வடிந்ததுவோ ஆசைக்குருதியும் செங்குளமாய் ?

வதைக்கும் வலி அலைகளாய் எழுந்ததுவோ நினைவுக் கற்றைகள் ?

சோக கீத நதிகளானவோ ஏக்க ஊற்றுகள் ?

மயங்கும் மாலையில் சோலையும் விம்மிட

இதய யாழினில் சோக ராகங்கள் ஓயாது மீட்டிடும்

கானக் கருங்குயிலே ! சொல்லாயோ விடை இதற்கு ?

இலைச்செறிவிடை இராக வழி ஊர்ந்து

விழிநோகக் காத்திருக்கிறேன் ;தாபங்கள் கூறாயோ ?

கூவோ...கூவோ ..கூவோ என உயர்கிளையில் மெல்லத் துவங்கிய நீ

குவ்வ்வோ ..குவ்வ்வோ...குவ்வ்வ்வோ என உச்சக் கூர்குரலில்

இதயமே இடிபடக் கூவி அழைப்பதுவும் எவரையம்மா ?

இரங்கியே அழைத்தும் இறங்காது செல்பவன்

எக்கயவன் அம்மா ?எக் கல்நெஞ்சன் அவன் ?

அலை அலையாய்ப் பெருகி வரும் கீதக் கடலினிலே மூழ்கிடினும்

ஏக்கத்தின் ஆழமதைக் கண்டிலனே !

சிற்றலகு விரித்துப் பெரும் சோகக் குரல் கூட்டி

இச்சோலை வனம் கலக்குகின்றாய் ; பொன் மாலையினை உருக்குகின்றாய் !

ஆறுதல் கூறிடவோ காதல் தேவி வெள்ளி

மேற்திசை வான் வாயிலிலே முகம் காட்டி அன்பாய் முளைத்தனளோ ?

தொற்றிடுமோ உன் சோகம் என்றஞ்சும் கீழ்த்திசையாள்

இரவுமகன் வரவு கண்டு பேராசையுடன் அணைக்கின்றாள்

எங்கோடிப் போவானோ என்று எழும் பேரச்சத்தால் !

என் நெஞ்சினிலும் நொடியில் இதோ பிரிவுக்கனல் மூட்டி விட்டாய் !

கீதநெய் வார்த்து ஓங்கி அதை வானுயர வளர விட்டாய் !

காதலிலே நெகிழ்ந்து துயர் கானத்திலே கரையும்

பேடைக் கருங்குயிலே!ஆறுதல் யாது சொல்வேன் ?



................சந்திர கலாதர்

No comments:

Post a Comment