Saturday, December 8, 2012


பொன் மாலை உருக்கும் கருங்குயிலே !

&

தைத்ததுவோ பருவ நெஞ்சுள் கூர்முனைக் காதல் முள் ?

ஆங்குக் கசிந்து வடிந்ததுவோ ஆசைக்குருதியும் செங்குளமாய் ?

வதைக்கும் வலி அலைகளாய் எழுந்தவோ நினைவுக் கற்றைகள் ?

சோக கீத நதிகளானவோ ஏக்க ஊற்றுகள் ?

மயங்கும் மாலையில் சோலையும் விம்மிட

இதய யாழினில் சோக ராகங்கள் ஓயாது மீட்டிடும்

கானக் கருங்குயிலே ! சொல்லாயோ விடை இதற்கு ?

இலைச்செறிவிடைஇராக வழி ஊர்ந்து

விழிநோகக் காத்திருக்கிறேன் ;

தாபங்கள் கூறாயோ ?


கூவோ...கூவோ ..கூவோ என உயர்கிளையில் மெல்லத் துவங்கிய நீ

குவ்வ்வோ ..குவ்வ்வோ...குவ்வ்வ்வோ என உச்சக் கூர்குரலில்

இதயமே இடிபடக் கூவி அழைப்பதுவும் எவரையம்மா ?

இரங்கியே அழைத்தும் இறங்காது செல்பவன்

எக்கயவன் அம்மா ? எக் கல்நெஞ்சன் அவன் ?

அலை அலையாய்ப்பெருகி வரும் கீதக் கடலினிலே மூழ்கிடினும்

ஏக்கத்தின் ஆழமதைக் கண்டிலனே !


சிற்றலகு விரித்துப் பெரும் சோகக் குரல் கூட்டி

இச்சோலை வனம் கலக்குகின்றாய் ;

பொன் மாலையினை உருக்குகின்றாய் !

ஆறுதல் கூறிடவோ காதல் தேவி வெள்ளி

மேற்திசை வான் வாயிலிலே முகம் காட்டி அன்பாய் முளைத்தனளோ ?

தொற்றிடுமோஉன் சோகம் என்றஞ்சும் கீழ்த்திசையாள்

இரவுமகன் வரவு கண்டு பேராசையுடன் அணைக்கின்றாள் ;

எங்கோடிப் போவானோ என்று எழும் பேரச்சத்தால் !

என் நெஞ்சினிலும் நொடியில் இதோ பிரிவுக்கனல் மூட்டி விட்டாய் !

கீதநெய் வார்த்து ஓங்கி அதை வானுயர வளர விட்டாய் !

காதலிலே நெகிழ்ந்து துயர் கானத்திலே கரையும் பேடைக் கருங்குயிலே

ஆறுதல் யாது சொல்வேன் ?.




...............சந்திர கலாதர்

Friday, December 7, 2012

அமைதியையும் நிசப்ததையுமே அனுபவித்து வந்த என் மனதை இன்று
அதன் ஊடே கலந்து வரும் சப்தங்களையும்
முதலில் மனதார ஏற்றுப்
பின் நுகரவும் மகிழவும் துவங்குகிறேன் .
காலையின் ஈரக் குளிர் ;
சூடில்லாத சூரிய ஒளி .
அமைதியைக் கீறி நாலா மூலைகளிலிருந்தும்
அணில் நண்பர்களின் சந்தோஷப் பரிமாற்றங்கள்
'சிடு சிடு சிடு ' தந்தி சங்கேதங்களில் --
வடக்குத் தொடுவானில் சோகமாக ஒரு தொழிற்கூடச் சங்கு விம்மித் தாழ்கிறது ;
நான் நடைப்பயிற்சியில் உயிர்க்கும் பெருமூச்சுகள் கூட
காற்றில் சிறு நுண்ணிய அலை ஓசை எழுப்புகிறது .
தென் மூலையிலிருந்து திடீரென விமானம் ஒன்றின் பின்தங்கிய குடையும் ஒலி -
' கியோன்க் கியோன்க் ' எனும் மஞ்சள் விளிம்பு விழி மைனாக்களின் காதல் அழைப்பு !
யாரோ பக்கத்து தொகுப்பு வீட்டில் பக்தி மேலிட வழிபடும் ' கிண்கிணி கிண்கிணி ' சிறு மணியோசை ;
வானின் குறுக்காய் 'பட பட பட ' புறாச் சிறகு இயக்கம் .
நகரத்தின் 'ஆட்டோ 'வின் கடுமையான கண்விழிப்பு ;
என் நிழலின் நகர்வின் வேகம் எழுப்பும் 'மைக்ரோ ' ஓசை -
ஆம் , எல்லாவற்றையுமே கலந்து அனுபவிக்கக் கற்றுக் கொள்கிறேன் .
எனக்குள் நானே என் போதி ஞானம் விழிப்பு கண்டு மெல்லிய புன்னகை தரிக்கிறேன்.
--சந்திர கலாதர்
08.12.2012. / சனி / கார்த்திகை 23 /நந்தன
காலை மணி 8
--
S.CHANDRA KALAADHAR

Thursday, December 6, 2012

பெண்களைப் பார்த்து
அழகிய பொய் சொல்லுங்கள் !
சத்தியம் உங்களைத் தண்டித்து விடாது -
பெண்ணும் கூடக் கொஞ்சம் நம்புவாள்
கண்ணாடி முன் நின்று
தலை சாய்த்துச் சரி பார்ப்பாள் !
'பெண் '-' பொய் ' ஒற்றுமை பாருங்கள்
ஈரெழுத்தாய் மெய்யும் ஒற்றுமாய்
எத்தனை பொருத்தம் !
சத்தியம் கேட்டால்
சொல்லிக் கொள்வோம்
'இந்நொடி எனக்கிவள்
ஆசைப் பிழம்பில்
வான் தேவதையே ! '--
அதன் தலையில் அடித்தே
சத்தியம் செய்வோம் !
பொய்யைக் கலந்துதான்
பெண்ணைப் படைத்தான்
---சந்திர கலாதர்
06.12.2012 /வியாழன் / கார்த்திகை 21
பிற்பகல் 2 மணி
--