தேம்பி அழுதபடி அமைதி அலைகிறது !
தேம்பி அழுதபடி
அமைதி அலைகிறது--
திக்கு எங்குத் திரும்பிடினும்
திரண்டு வரும் காட்சி என்ன ?
பீரங்கி நீள் மூக்குகளின்
நெருப்புச் சுவாசங்கள் !
சீறிடும் விமானங்கள்
விரித்திடும் மயானங்கள் !
அழுகை அருவிகள் !
பிண நாற்ற நாள் இதழ்கள் !
தொலைக்காட்சிச் செய்தி எல்லாம்
மனிதச் சிதைவுகள்!
கூன் உலகு மேனியிலோ
கோடி ரணக் கிழிசல்கள் !
தேவை வலி தணித்திருக்க
அவசரத் 'தன்னலத்'தையல்கள் !
அச்சாணி அவிழ்ந்துபோன
ஆரவாரப் பொய்யுரைகள் !
பள்ளிகளில் துப்பாக்கிகள்
பிள்ளைகளின் பேனாக்கள் !
இரத்தமே மை இங்கு !
பழிக்குப் பழி பாடமாச்சு !
கடத்துவதே கணக்காகி
அழிப்பது அறிவியலாய்ப்
பூநிலத்தைப் பிய்த்து எறிந்து
தரித்திரமே சரித்திரமாச்சு !
எதற்கடா இப்போர்கள் ?
ஏன் இந்த அழிவுச் சுழல் ?
வேற்றுமை வேனலிலே
எத்தனை விரிசல்கள் ?
கூறுபோட்டுக் கூறுபோட்டுக்
கூறுகெட்டுப் போய்விட்டோம் !
இருகை விரிப்பதற்குள்
எல்லைகளை எட்டுவதோ ?
முகம் பார்க்க முடியாமல்
முட்கம்பிகளை முளைக்க விட்டோம் !
வன்முறையைப் பயிராக்கி
வாய்மையையே களைஎடுத்தோம் !
ஒன்றுரைப்பேன் ;செவி மடுப்பீர் !
சிந்தித்துச் செயலாவீர் !
புறவேற்றுமைகள் எதுவெனினும்
எம்மூலை தாம் முடங்கிடினும்
எளியவர் எண்ணம் எல்லாம்
கனிவு சொட்ட நிற்பதுவே !
குழந்தைகள் சிரிப்பதெல்லாம்
பேதங்களில் பூப்பதில்லை !
பூமியின் பரப்பெல்லாம்
பசுமை பிறப்பிக்கும் உலகுயர் மாந்தர்களே !
சுயநலத் தேர் ஏறிவர
விஷ வித்துக்களை விதைக்கின்ற
சிறு கைப்பிடி எத்தர்களை
எட்டியே உதைத்திடுவோம் !
உலகு எங்கும் வளர்ந்துவிட்ட
முள் வரப்புகளை உடைத்தெறிவோம் !
கருணைமொழி கொண்டு
காயங்களில் மருந்திடுவோம் !
போதும் நாறும் வேற்றுமைகள் !
கறுப்பென்ன ? சிவப்பென்ன ?
மொழி என்ன ?மதம் என்ன ?
நாடும் வீடும் தான் என்ன ?
கருணைமொழி பேசுதற்கு
கண் இரண்டே போதாதோ ?
நமக்குள்ளே ஒரு ஜீவன்
நாடுவதோ அது உறவு !
பிரிவுகளில் பிய்ந்து பிய்ந்து
ஏக்கம் எல்லை மீறலாச்சு--
கைகோர்த்து இடை தழுவி
கால்கள் குதி நடமாட
வகைவகையாய் நாம் பாடி
வான் மேகத்துள் வலம் வருவோம் !
வான வில்லின் வண்ணங்களில்
விண்ணிலும் நட்பு வரைந்திடுவோம் !
ஒ ! உலகம் நெஞ்சுள் உருளட்டுமே !
உலகின் நெஞ்சம் விரியட்டுமே !
----சந்திர கலாதர்
No comments:
Post a Comment