Saturday, December 8, 2012


பொன் மாலை உருக்கும் கருங்குயிலே !

&

தைத்ததுவோ பருவ நெஞ்சுள் கூர்முனைக் காதல் முள் ?

ஆங்குக் கசிந்து வடிந்ததுவோ ஆசைக்குருதியும் செங்குளமாய் ?

வதைக்கும் வலி அலைகளாய் எழுந்தவோ நினைவுக் கற்றைகள் ?

சோக கீத நதிகளானவோ ஏக்க ஊற்றுகள் ?

மயங்கும் மாலையில் சோலையும் விம்மிட

இதய யாழினில் சோக ராகங்கள் ஓயாது மீட்டிடும்

கானக் கருங்குயிலே ! சொல்லாயோ விடை இதற்கு ?

இலைச்செறிவிடைஇராக வழி ஊர்ந்து

விழிநோகக் காத்திருக்கிறேன் ;

தாபங்கள் கூறாயோ ?


கூவோ...கூவோ ..கூவோ என உயர்கிளையில் மெல்லத் துவங்கிய நீ

குவ்வ்வோ ..குவ்வ்வோ...குவ்வ்வ்வோ என உச்சக் கூர்குரலில்

இதயமே இடிபடக் கூவி அழைப்பதுவும் எவரையம்மா ?

இரங்கியே அழைத்தும் இறங்காது செல்பவன்

எக்கயவன் அம்மா ? எக் கல்நெஞ்சன் அவன் ?

அலை அலையாய்ப்பெருகி வரும் கீதக் கடலினிலே மூழ்கிடினும்

ஏக்கத்தின் ஆழமதைக் கண்டிலனே !


சிற்றலகு விரித்துப் பெரும் சோகக் குரல் கூட்டி

இச்சோலை வனம் கலக்குகின்றாய் ;

பொன் மாலையினை உருக்குகின்றாய் !

ஆறுதல் கூறிடவோ காதல் தேவி வெள்ளி

மேற்திசை வான் வாயிலிலே முகம் காட்டி அன்பாய் முளைத்தனளோ ?

தொற்றிடுமோஉன் சோகம் என்றஞ்சும் கீழ்த்திசையாள்

இரவுமகன் வரவு கண்டு பேராசையுடன் அணைக்கின்றாள் ;

எங்கோடிப் போவானோ என்று எழும் பேரச்சத்தால் !

என் நெஞ்சினிலும் நொடியில் இதோ பிரிவுக்கனல் மூட்டி விட்டாய் !

கீதநெய் வார்த்து ஓங்கி அதை வானுயர வளர விட்டாய் !

காதலிலே நெகிழ்ந்து துயர் கானத்திலே கரையும் பேடைக் கருங்குயிலே

ஆறுதல் யாது சொல்வேன் ?.




...............சந்திர கலாதர்

No comments:

Post a Comment