ப்ரிய ரூபங்கள்
முழு நிலவைப் பார்த்தவுடன் முத்தமிட வான் நிறைக்கும்
உறைபனி மேகங்கள் எனது ப்ரிய ரூபங்கள் ...
விதவிதமாய்க் குரலெடுத்து அழகழகாய்ச் சிறகவிழ்த்து சுறுசுறுப்பாய்ச் சுற்றிவரும்பறவை இனம் ப்ரிய ரூபங்கள் ...
மௌனத்தின் மோகனமாய் பூமிபெற்ற பெருமிதமாய்
நீலம் பூத்துச் சரிந்திருக்கும்மாமலைகள் ப்ரிய ரூபங்கள் ....
கோணல் கோலம் கொண்டாலும் கோபுரம்போல் அழகு பொங்கும்
கோடிப் பச்சை மர வகைகள் நாடிடும் ப்ரிய ரூபங்கள் ...
பல குரல்கள் பல நடைகள் பல மொழிகள் பயிற்றுவித்து
பசுமை நகை கரைவிரிக்கும் நதிகள் ப்ரிய ரூபங்கள்...
எல்லையற்ற வடிவங்கள் ஈடற்ற சுகந்தங்கள் என
எழில் இறைக்கும் மலர் இலைகள் எல்லாமே ப்ரிய ரூபங்கள்...
தொட்டுப் பேசும் தென்றல்வரைகடித்துவிடும் வாடைவரை
காற்றினங்கள் எல்லாமே எனது ப்ரிய ரூபங்கள்...
கார்மேக வீரர்களின் மழை அம்புச் சொரிவுதனின்
ராக தாளங்கள் ப்ரிய ரூபங்கள்...
மனமறிந்து அன்புகாட்டி குணமறிந்து வழிநடத்தி
வித்தகனாய் வளர்த்துவிட்ட தாய் தந்தை ப்ரிய ரூபங்கள்...
எட்டு மணி அவசரத்தில் "அம்மா!அப்பா!டாட்டா! என்று
பள்ளி நோக்கிப் பாய்ந்து செல்லும் என் பாலகர்கள் ப்ரியரூபங்கள்...
.....சந்திர கலாதர்
No comments:
Post a Comment