நீ வருவாய் ! கை தருவாய் !
@@@
ஆற்றின் பெருவெள்ளம் அகன்ற கரைகளை
அறுத்துச் செல்கிறது --
புரண்டு மோதி , நுரைத்துச் சுழித்து
ஆவேசமாய்ச் சிவந்து
புது வெள்ளம் பாய்கிறது --
எங்கும் " ஹோ " ங்காரம் !
மழை தன்னைத் தானே
சாட்டையால் விளாறிக்கொண்டு
கத்திக் கதறுகிறது--
'பளப்பள ' மின்னல்கள் மேகங்களைக்
குத்திக் கிழிக்கின்றன --
பேரிடிகள் அண்டங்களைக் குட்டுகின்றன;
நொறுங்கல்கள் எங்கோ சரிகின்றன--
காற்று முடியைப் பிய்த்துக்கொண்டு
ஊளை இடுகின்றது --
ஐம்பூத ஆவேசக் கூத்தா இது ?
@
அந்த நள்ளிரவின் மைப்பூச்சில்
ஆற்றங்கரை ஓரம்
கந்தைத் துணி தலை சுற்றி
தடித்த மழைத் திரைவழி
கொடிமின்னல் ஒளியின்
நொடி விசிறல்களில்
பார்வைத் தூண்டிலிட்டு
உனக்காக....
எனக்கான சிறு படகை எதிர்நோக்கி
வெடவெடத்துக் காத்திருக்கிறேன்--
@
அண்டங்கள் கோடி நீ
தாண்டி இருந்தாலும்
என் தவிப்பு எப்படியும்
உனைப் பற்றி இழுத்து விடும்..
இசையாய்த் துடுப்பு
எனை நோக்கி வரும்--
@
என் நம்பிக்கை
சத்தியம் ! சத்தியம்!
நீ வருவாய்
கை தருவாய்
வழி அழைப்பாய் !
--சந்திர கலாதர்
No comments:
Post a Comment