கவிதைப் புயல் பாரதி !
அன்று..
குண்டும் குழியுமாய்
முட்டி மோத வைத்த
தமிழ்ச் சாலையிலே
இவன் ..
தீயினைத் தேராக்கி
விழியினை வில்லாக்கி
மின்னலை அம்பாக்கி
இடிகளைச் சொல்லாக்கி
புரட்சி மழையாய்
மடமை இடிக்க வந்தான் !
அடிமைக் குடிமையை
அடியோடு தகர்த்திட
ஆவேசம் பொங்கும்
கவிதைப் புயலானான் !
@
ஆனால்..
இயற்கை தொட்டதும்
இறக்கை விரித்துப்
பூக்கோலம் பூண்டு
தென்றலாய்த் திரிந்திருந்தான் !
குழந்தை முத்தமாய்
தமிழ்ச் சொற்களால்
தழுவி அணைத்திடுவான் !
@
இவன் ஒருவன்தான்
நாக்கோடு நெஞ்சையும்
நடையோடு உதட்டையும்
இணைத்துப் பிணைத்த
பித்தன் என்றானான் !
@
இவன்தான் பாரதி !
இவன் பாக்களோ
ரதி அழகு !
இவன் நெஞ்சில்
சுமந்ததோ தீ !
புனிதத் தீ !
இவன் பாடினால்
அதிருமே பார் !
இவனைப்
'பார் அதி நேரம்' எனக்
கெஞ்சுமே நம் விழி !
--சந்திர கலாதர்
No comments:
Post a Comment