Friday, June 10, 2011

THE DREAM GIRL I YEARN FOR ! [ PART--2 ]

கனவுக்கன்னி நலம் சொன்னேன் [ பகுதி- --2 ]

என் உள்ளத்து எழுச்சி எல்லாம் கற்பனைக் காட்சி எல்லாம்
தான் கேட்டுத் தெரிந்துகொண்டு என் உள்ளம் மகிழ்ந்திடவும்
என் குற்றம் களைந்திடவும் என் பண்பு உயர்ந்திடவும்
என் தாகம் தணிந்திடவும் ஓரிரு நல் வார்த்தைகளை
இதமாகக் குறும்பாக மெதுவாக அழகாக
மொழியும் அவள் நீ காணின்
வசந்த வீதியிலே வருந்தாது அழைத்து வாராய் !

&&&&&&&&&

புவியெங்கும் கோலமிட்டு ஆதவனை வரவேற்க
உஷை என்னும் தேவ நங்கை வண்ணம் தீட்டி வருகையிலே ---
தவறாது தான் எழுந்து வீட்டின் இருபுறமும்
சாணமிட்ட நீர் தெளித்து தாமரைகள் பல மலர்ந்து
தலை அசைத்துச் சிரித்தாற்போல் --
அழகழகாய் விதவிதமாய் ஒளிமயமாய்க் கோலமிட்டு
என் நெஞ்சைப் பெருமிதத்தால் பூரிக்கச் செய்திடுவாள் --

அந்நங்கை நீ காணின் பொற் கதிரால் அணி செய்து
மங்கலமாய் மனை சேர்ப்பாய் !

&&&&&&&&&&

கடுகடு முகத்தினராய் முணு முணு இதழினராய்
நறநறப் பற்களோடும் தீ உமிழ் பார்வையோடும்
புகை கக்கும் நாசியராய் வஞ்சகப் பார்வையராய்ப்
புறம் கேட்கும் செவிகளொடும் பொறாமை நிறை விழிகளோடும்
கொடும் வஞ்சக நெஞ்சினராய்ச்
சூதினிலே மந்தரையாய் வாதினிலே சமர்த்தர்களாய்
அடி வயிற்றில் தீ வளர்த்து அணையாமற் காப்பவராய்
அலைகின்ற நங்கையரை அறவே நீ ஒதுக்கி விடு !
துணையாக அவர்சேர பிறப்பே வீண் அன்றோ ?

எனவே தான் கதிரோனே ! அடையாளம் நீ அறிந்து
அந்நங்கை அழைத்து வாராய் மேகப் பூச் சரம் சூட்டி !


----------சந்திர கலாதர்

No comments:

Post a Comment