Friday, June 10, 2011

THE DREAM GIRL I YEARN FOR..! [ PART--1 ]

கனவுக்கன்னி நலம் சொன்னேன் ! [ பகுதி -- 1 ]

கற்பனையில் உதித்திட்டாள் கனவுகளிற் திரிகின்றாள்
குணநலன்கள் கூறிடுவேன் கூர்மையாய்ச் செவிமடுப்பாய்
மலர்தூவி அழைத்து வந்து மருந்தாகக் கரம் சேர்ப்பாய்
உலகெல்லாம் அலைபவனே! சூரியனே வேண்டுகிறேன் !

கனவின் கன்னியவள் இன்மொழியாம் நல்லமுதை
அமைதியாய் மிக நளினமுடன் விழியாலும் கனி இதழாலும்
வாரிவாரி எப்பொழுதும் குழைந்திடும் தாய் மொழியில்
என்னிரு செவிகளிலே மென்மையாய் வார்த்திடுவாள்
உள்ளத்தைத் தன்னுரையால் மகிழ்வினிற் தோய்த்திடுவாள்--

அதிகாலையிற் தான் எழுந்து குளிர் நீரிற் குளித்துவிட்டு
தூய மஞ்சள் முகம் மிளிர்ந்து மங்கலத்தை மகிழ்ந்துரைக்க
துவைத்துலர்ந்த புடவைதனைப் பொலிவுடனே அணிந்துகொண்டு
அழகு ஒளிர் நுதலகத்தில் குங்குமத்தால் திலகமிட்டு
சிறுகீற்றாய்த் திருநீற்றைச் சிறு முகிலாய்த் தீட்டிவிட்டு
தளிர் விரலாற் தீபம் ஏற்றி வாய்நிறையத் துதிபாடி
விழிகள்வழி வழிந்துருகும் பக்தி ஊற்றில் எனை நீராட்டி--

உள்ளீரம் உலர்ந்திடாத பளபளக்கும் கூந்தலினைச்
சிறு முடியிட்டு முதுகிற் தாங்கி
கூந்தற் பொடி மணமணக்கும் சோர்குழலிற் சரம்சூடி
நந்தி போலும் நிலம் சேர்ந்து தெய்வச் சிலை தனை வணங்கி
விழிகள் மூடி நலம் நாடும் அழகு நங்கை அவள் கண்டால்--

என் இதயக் கோவிலிலே நடமாடும் தேவியாகிடவே
தென்றல் போர்த்தி அழைத்து வாராய் !

காலையிலே மனை கூட்டி முகத்திற்குப் பொலிவூட்டிப்
புத்தாடை புனைந்திடுவாள் ; நான் விரும்பும் கீதங்களை
அவள் விரும்பும் பாடல்களை உளம் நெகிழப் பாடிடுவாள்--

உள்ளத்துத் தாபங்களைப் பலர் அறியக் கதறிடாது
ஊர் சிரிக்கப் பேசிடாது உள் வீட்டுச் சண்டைகளைக்
கொல்லையிலே முழக்கிடாது மெதுவாக எனை நெருங்கி
விழியருவி எனை நனைத்து மௌனத்தில் எனை உருக்கி
மெல்லவே இன்குரலில் என் நெஞ்சம் தைக்குமாறு
ஒன்று ஒன்றாய்ப் பிழை காட்டிப் பலவாறாய் அவை தன்னை
வாட்டிடும் வகை கூறி அன்பினில் எனைத் திருத்தி--

பண்பிலே வழி நடத்தும் அந்நங்கை நீ காணின்
வானவில் மாலையிட்டு மனம் மகிழச் சேர்த்திடுவாய் !

----சந்திர கலாதர்

No comments:

Post a Comment