இது கவிதை அல்ல ! உண்மை நிகழ்வு ! நாடோடிகள் வாழ்வில் ..!
30.09.1991 / திங்கள்..காலை 07.00 மணி .
வாயிற் கதவு அருகே , " அம்மா ! " என்ற அழைப்புக் குரலோடு இரும்புக் கதவுகள் மெலிதாக மோதிக் கொள்கின்றன ..வழக்கம்போல் கையிலே தட்டேந்தி வரும் ' மாரியம்மா ' பெண்களா ? அல்லது குறிப்பேடு தாங்கி வரும் கோயில் நிதி திரட்டுவோரா ?--என ஐயங்கள் கிளர்ந்தெழ வாயிலுக்கு வருகிறேன்...வாயில் அருகே ஓர் நடுத்தர வயது ஏழைப் பெண் ..." அய்யா ! ஒருவர் இறந்து விட்டார் !..அவர் பிணத்தை எடுப்பதற்கு ரூ .100 /- கேட்கிறார்கள் ...நான் ஒரு முண்டச்சி ..என்ன செய்வேன் ?..ஆளுக்கொரு ரூபாயோ இரண்டோ கொடுத்தால் உதவியாக இருக்கும் .." எனக் கை ஏந்துகிறார் ..திடுக்கிடுகிறேன் !..அடிவயிற்றில் அதல பாதாளமாய்க் குழி இடுகிறது பரிதாபம் !. ." யார் அம்மா நீங்கள் ? என்ன ஆயிற்று ? "--என்கிறேன் ." அய்யா ! ஒரு இருபத்தைந்து வயது எங்காள் ஒருவர் இறந்து போனார் ..நாங்கள் அதோ அந்த வெட்ட வெளிப் பொட்டலில் ..புளிய மரத்தடியில் ஜீவனம் செய்யும் நாடோடி ஜோசியம் பாக்கறவங்க ...என்னய்யா பண்றது ?..குழி எடுக்க நூறு ரூபாய் கேக்குறாங்க சாமீ ..! ".வேறு ஏதாவது ஏமாற்று வேலையாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுகிறது .." அம்மா ! பிணம் எங்கிருக்கு ? " " இதோ பாருங்க..அந்த மரத்தடியிலதான் இருக்குது.." உடனே நெஞ்சே நெகிழ்ந்து போகிறது ..இரு நாட்களாய் எங்கோ கேட்பதுபோல் தோன்றிய மரண வேதனை இரவில் ஓர் ஏழையின் வீட்டில் பதம் பார்த்து விட்டிருக்கிறதே ! வீட்டிற்குள் விரைகிறேன்; ..மனைவியிடம் ஒரு நிமிட ஆலோசனை .." அம்மா ! ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்தான் கேட்கிறார்கள்... ஏமாற்றில்லை !...ஏழ்மை ! ..பொய்மை இல்லை !....மரணம் கொத்தி விட்டிருக்கிறது ..ஒருத்தியை இரவு அபலை ஆக்கி இருக்கிறது ..சில குழந்தைகள் நள்ளிரவில் நடுத் தெருவில் நிர்க்கதியாய் ...பிணம் மரியாதை செய்யப்பட வேண்டும் ..ஏனெனில் அது ஓர் திக்கற்ற ஏழையின் சடலம் " என்கிறேன் .மனைவி அவசரமாக ஐந்து ரூபாய்களை என்னிடம் திணிக்கிறாள் ..ஓடோடிச் சென்று அப்பெண்ணிடம் கொடுக்கிறேன் ..சிறிய உதவிதான் ..எனினும் சின்ன நிறைவு !...குழந்தைகள் சூழ , " என்னப்பா..? என்னப்பா.? " என விழிகளில் பறக்கின்றன--.ஏழையின் வாழ்வின் அவலத்தை விரிவாக அந்தப் பிஞ்சு நெஞ்சங்களில் விதைத்துக் கருணையை அறுவடை செய்கிறேன்--.கண்கள் அந்தப் பொட்டலையே பார்த்து விறைக்கின்றன--.இனி என்னென்ன சோகங்களோ ? ..வாழ்வே வெட்ட வெளியில் !..இனி அவ் வெட்டவெளியிலும் ஒரு குருட்டு வெளியா ? குழந்தைகளிடம் சொல்கிறேன் .." குழந்தைகளே ! இரவெல்லாம் மின்விசிறி,கொசுவேடர்களிடம் இருந்து உங்களைக் காக்கின்றது--.நல்ல வீட்டின் அணைப்புள் போர்வை ,தலையணை ,மெத்தை இத்யாதிகளுடன் ..பாம்பு,பல்லி,தேள்,விஷ உயிர்களின் நச்சு நாவு கொடுக்குகளுக்கும் அப்பால் நீங்கள் ---.அவர்கள் பரம ஏழைகள்-- ..அவர்கள் இரவில் படுப்பதெல்லாம் மண்வெளியில் கொசுக் கூட்டங்களிடை ...அவற்றின் அரக்கப் பசிக்கிரையாகி .விஷ உயிர்களின் கருணையில்--.பனி யில் ..மழையில் நடுங்கி வாடி ...பார்த்தீர்களா வாழ்வின் அவலங்களை ! ....அவர்கள் இறந்தால் எந்த அரசும் உதவிக்கு ஓடி வருவதில்லை--.எங்களைப் போன்ற அரசு அல்லது தனியார் நிறுவன ஊழியர் இறந்தாலோ குறைந்தது சில ஆயிரங்களாவது உறுதி---இவர்களைப் பார்..பாவம்.புதைப்பதற்குக் கூட முடியாது தவிக்கின்றனர் !..இறந்தவர்க்கு எத்தனை குழந்தைகளோ .? அவர் மனைவியும் குழந்தைகளும் நாளைமுதல் எப்படி வாழப் போகிறார்களோ ..சொல்லுங்கள்..? நாம் உதவ வேண்டும் ஏழைகளுக்கு " என என் சொற்களில் இதயத்தை நடைபோட வைக்கிறேன்---.குழந்தைகள் மென்மையாக ஆமோதிக்கின்றன ! . என் நெஞ்சு ஏனோ இன்னமும் நிறைவாகவில்லை--.நான் அளித்த ஐந்து ரூபாய் போதாது --என் மனைவியுடன் அவர்கள் சோகம் பற்றிப் பேசிய வண்ணமே இருக்கிறேன்--.நான் இன்று அந்தச் சடலத்தை அகற்ற இன்னமும் உடலால் ...பணத்தால் ,உழைப்பால் உதவியாய் நல்கி இருக்கவேண்டும்--.உணவு ஏறவில்லை !..அலுவலகம் செல்லக் கலங்கிய மனத்துடன் பஸ் நிறுத்தம் வந்து சேருகிறேன்-- .சிறிது தொலைவில் மரத்தடியில் சிறு கூட்டம்-- அங்கிருந்து அப்பெண் இன்னொரு ஆணுடன் வருகிறார் ---எனக்கெதிரே ஓர் சேட்டின் அடகுக் கடை ---அப்பெண்ணின் கையில் இரு சிறிய வெண்கலப் பாத்திரங்கள் --.அடகு வைக்கிறார்கள் !.என்ன பணம் கொடுத்திருக்கப் போகிறான் சேட் ?..அய்யோ .! அதை அடகு வைக்காதீர்கள்--..நான் பணம் தருகிறேன் இன்னமும்.!." என என் மனம் உள்ளூரக் கூச்சலிடுகிறது ...பாத்திரங்கள் கைமாறிவிட்டன ..ஒருவேளை அவை இறந்தவர் வீட்டு ஒன்றிரண்டு பாண்டங்களில் ஒன்றோ ? ஐயோ...அப்படியானால் எவ்வளவு நாட்கள்
பைசா பைசாவாக மீதம் பிடித்து வாங்கினார்களோ ? மரணம் அதற்கும் மரணத்தை அளித்து விட்டது ! கிளி ஜோசியத்தில் இவர்கள் இனி என்று மீட்க ?..என்று இனி இதுபோல் வாங்க ? இவர்கள் குழந்தைகள்--என்று இந்தக் காலத்துப் பணம் தின்னிப் பிசாசுகள் வாழும் பள்ளிகளில் படித்துக் கல்வி பெற ? குழந்தைகளே.! உங்களுக்காக என் கண்ணீர் நதிகள் !--எந்த அரசாங்கமும் உங்களைத் தேடி வரப் போவதே இல்லை !--ஊர்வலமும் உற்சவமுமாய் அரசியல்வாதிகள் ஆகிவிட்ட பின்--கோயில்களே திருவிழாக்கள் இல்லாது போயினவோ ? பொய்ப் பட்டமும் , அரணாய்க் காவலும் , கால் பதியா ஓட்டமும், வான்-நிலம் பார்க்காப் பயணங்களும் கொண்ட மந்திரிகள் உங்களை என்று பார்க்கப் போகிறார்கள் ? புலிப்படை,பூனைப்படைகளைத் தாண்டி அவர்கள் பார்வை செல்ல வழி ஏது ?--நெஞ்சிலே துப்பாக்கிக் கவசம்--வலிய துப்பாக்கிக் குண்டே நுழைய முடியாத இவர்கள் நெஞ்சில் எப்படியம்மா கருணை மென்பார்வை வழி கேட்கும் ? உங்களுக்காக எத்தனை ' வித்யாசாகர்கள் ' தோன்ற முடியும் ? வித்யா சாகர்களோ ' லக்ஷ்மிசாகர் 'களாகப் பணம் நிறைந்து காணப்படவில்லையே ! பேருந்து வரப் பார்க்கிறது--அதன் உறுமலும் அருகில் கேட்கிறது--சில நொடிகள்தான் ! பையைத் திறந்து பர்ஸைத் திறந்து ஓர் புதுப் பத்து ரூபாயை எடுக்கிறேன்--அப்பெண்ணிடம் ஓடுகிறேன் ! பஸ் ..அதோ மூலையில் வந்தே விடுகிறது--அப்பெண்ணின் கையில் மற்றோர் எனது பத்து ரூபாயைத் திணிக்கிறேன்--கையிரண்டும் கும்பிட உயர்கிறது ! பஸ் என்னைப் பிய்த்து விரைகிறது ..இனி என்ன..? அலுவலகம்தான் . ஆனால் என்னவோ நெஞ்சில் சற்று நிறைவு !
எனக்கென்னவோ மனிதநேயக் கவிஞன் ஆவதைவிட மனிதாபிமானியாக வாழ்வதே பிடிக்கிறது !
ஆயிரம் மனிதநேயக் கவிதைகளில் உருகி வழிவதைவிட .உடலால் , உழைப்பால் மனிதனாவதையே நான் வெகுவாக வேண்டுகிறேன் !
இறைவா ! எனக்குக் கருணை பொங்கும் இதயமும் வழங்கத் தேவையான பொருளும் மனமும் தா..!
என் கரங்கள் சோகங்களின் நடுவில் அவற்றின் முட்களைச் சற்று முறிப்பதாய்த் துணை செய்யட்டும்
.....சந்திர கலாதர் ...
[.பின்குறிப்பு--இருபது ஆண்டுகளுக்கு முன்னால் 15 ரூபாய் என்பது சற்று மரியாதையான தொகை ஆகும் ] .
No comments:
Post a Comment