Friday, June 10, 2011

THIS IS TO KILL YOUR LAZINESS !

இலக்கிய ஊஞ்சலில் [ ஒரு கை எழுத்து இதழில் ] நவம்பர் 1991 இல் என் எழுத்து---

உங்களை நான் அறிவேன்--மிக நன்றாகவே அறிவேன் !
உங்களைவிட உங்களை நான் நான்கு அறிவேன் என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள் ?
எனக்குத் தெரியும் நீங்கள் எல்லாம் மகாரசிகர்கள் !
பூக்களை அப்படி ரசிப்பீர்கள் !
ஆனால்..
நந்தவனத்தை நடந்து வரச் சொல்வீர்கள் !

பூமாலைகளில் நசுங்கும் மலர்களுக்காகக் கண்ணீர் ஆவீர்கள் !
ஆனால்--
மனைவிக்கு மட்டும் மலர் தோட்டத்தையே கூந்தலாக்குவீர்கள் !

நீங்கள் மிகப் படிக்கத் துடிக்கிறீர்கள் !
ஆனால்---
புத்தகங்கள் தங்களை வாசித்துக்கொண்டே உங்கள் இருக்கைக்கு வர விரும்புகிறீர்கள் !

எனக்குத் தெரியும் --நீங்கள் எழுதுவதில் வல்லவர்கள் என்று !
ஆனால்--
பேனா திறந்துகொண்டும் --
காகிதங்கள் உங்கள் கரங்களை நகர்த்திக் கொண்டும் வரவேண்டும் என்று மிக விரும்புகிறீர்கள் !

உங்களைப் புரிந்ததாற்தான் புத்தகங்களாக நான் உங்கள் முன் விரிகிறேன் ! எழுத்துக்களைப் புஷ்பிக்கிறேன் !

இது எனது ஆக்கிரமிப்பு அல்ல --
இல்லை--வித்தியாசமான படையெடுப்பு !
கஜினி முஹம்மது போல் அடிக்கடி படையெடுத்து நானல்லவா
இதுவரை தோற்றுப் போய் நிற்கிறேன் --

நான் உங்கள் சோமனாதபுரத்துக் கலைச் செல்வங்களைத் தீயிட வரவில்லை --உங்கள் இதயபுரத்து இடுக்கெல்லாம் இனிமை நட்டிட அல்லவா வந்திருந்தேன் ! ஆனால் தோற்றல்லவா புதைந்து விட்டேன் !

நான் மாறிவிட்டேன் --
இனி மகா அலெக்சாண்டர் போல் நீண்ட பெரும் சூறாவளியாய் சூழப் போகிறேன் ! உங்களை அடிமையாக்கப் போகிறேன்--எனது எழுத்துக்களால் !
உங்களைக் கொள்ளையிடப் போகிறேன் --எனது கருத்துக்களால் !

அதே அலெக்சாண்டர் போல் இவனும்
இறுதியில் எதனையும் எடுத்துச் செல்லப் போவதில்லை --

இவனது திறந்த உள்ளங்கைகளில்
உங்கள் இதயங்கள் நடந்த ரேகைச் சுவடுகளை அல்லவா
நீங்கள் கடைசியில் காணப் போகிறீர்கள் !

இவனது படையெடுப்பில் மடிந்தது ஒன்றாக இருந்தாற்போதும் !
அதுதான்--
உங்கள் இனிய சோம்பேறித் தனம்...சரியா !

--------சந்திர கலாதர்
[ 23-11-1991 ]

No comments:

Post a Comment