[ இலக்கிய ஊஞ்சல் என்ற கையெழுத்துப் பத்திரிக்கையை நான் பொறியாளராகப் பணி புரிகையில் நடத்தி வந்தேன்...அப்போது பலர் திறமை இருந்தும் வாய்ப்புத் தந்தும் ,நினைவூட்டியும் சோம்பேறித் தனத்தால் நாள் கடத்தியபோது எழுந்த எழுத்துகள் இவை..! ]
திறமைகள் சிறந்தும் ஆக்கங்களில் தேக்கம் --
கேட்டால் சொல்லில் மறுப்பே இல்லை...
செயலில்...வெறும் வட்டம் !
எத்தனை முறை சொல்வது ?
எத்தனைமுறை தூண்டுவது ?
நாவே நலிந்து தேய்ந்திடுமோ ?
இனி..
உங்களைக் கெஞ்சிப் பயனில்லை..
உங்களுக்கு எல்லாமே தொடுவானந்தான் !
தொடத்தான் மாட்டீர்கள் ..!
நாளையை நாவிலே சுமந்தே அலைவீர்கள் ..!
வேலை எனக் கதைப்பதே உங்கள் வீண்வேலை .!
சரி..
நீங்கள் எழுதாது ஒளியுங்கள்..!
எழுதுவதையாவது விழி வீச்சில் வளைப்பீரோ ?
எழுதும்போது ஆபரணங்கள் அணிந்து ,
என்னையே மறைத்துக் கொண்டு நான் எழுத இசையேன் ...
நான் நானாக , நெஞ்சோடு நாவு கோர்த்தே ..பிணைத்தே
படைக்க விரும்புகிறேன் .
நான் அழுகிறேன் ...
அழுகை என்னை அமிழ்த்தும் வேளையில் !
சிரிக்கிறேன் ...
நெஞ்சு இலேசாகி இறக்கைகள் காணும்போது..!
நான் என்ன புத்தனா ? போதனைகள் புரிய..!
இத்தனை அறிவுரைகளால் உலகம் நிரம்பி வழிந்தும்
திருந்தியவர் எத்தனை பேர் ?
கசடைக் களைந்தவர் எத்தனை பேர்.?
என்னால் கடைப்பிடிக்க முடியா ஒன்றைப் போதிக்கவும் முடியாது...
அது அதர்மம்...அறமன்று ..!
என் எழுத்துக்களே !
போர்வையை அகற்றி நெஞ்சில் நனைந்து வாருங்கள் !
போலிகளைக் காவு கொடுங்கள் !
இயற்கை வருணனைகளில் என்னை இழக்கிறேன் !
இயற்கை என் எழுத்துக்களை இயற்கையாக ஆக்குவதால் ...
இயற்கை...
என் கைகொண்டு தன்னை எழுதுவதால் பெருமை கொள்கிறேன் ..!
மனித நேயம் பற்றி எழுதுவது தானே ..? என்பதாய்
உங்கள் தாழ் பார்வை
என்னைத் தட்டிச் செல்வதை உணர்கிறேன் தப்பாது !
அங்கேதான் தவறு உள்ளது..
எழுத்துக்களை வைத்தா
மனித நேயத்தை அளந்து பார்க்கிறீர்கள் ?
அப்படியாயின் எழுதுகோல் பிடித்து
ஏடுநடை பயில்பவன் எல்லாமே ...
ஒலிபெருக்கி பிடித்து ,மேடை ஏறி அரற்றுபவன் எல்லாமே
மனித நேயர்களே !
மனித நேயத்தை ஒருவனின் தனிமையில் ...
அவனது தன் வாழ்வில் ..
அவனது வீட்டில் முடிவு செய்யுங்கள் என
நான் உரக்கக் கூவுகின்றேன் !
மனித நேயப் பொய்யர்களை ஒட்டுமொத்தமாக நான் அறிவேன் !
என் மனித மாண்புகள் அடக்கமாய் ..
அதிமௌனமாய்ப் பிறர் நெஞ்சில் புஷ்ப்பிக்கட்டும் !
இறைவா .!
நான் நானாகவே இருக்கட்டும் !
எனக்கு ஊருக்காக அரிதாரங்கள் வேண்டாம் !
மேனாட்டில் இயற்கையைச் சிறப்பாக
ஓர் கவிஞன் வடிவமைத்தால்
அவன் பெருமை அடைகிறான் .
இயற்கைக் கவிஞன் எனப் பட்டம் பெறுகிறான்.
இங்கேயோ நேர் எதிர் !
இன்னமும் வளரவில்லை எனக் குட்டப் படுகிறான் ..
வோர்ட்ஸ்வொர்த் ,ஷெல்லி இவர்களைப் பெருமையாகப் பாராட்டுகிறார்கள் ..
நம் நாட்டில் இயற்கையையே நுகர்ந்து நுகர்ந்து
மையல் கொண்டு ஒருவன் எழுதினால்
அவனைப் புறம் தள்ளி விடுகிறார்கள் !
எல்லோரும் ஓர் மாதிரியே இருப்பின் ..
எல்லோரும் ஓர் மொழியே பேசினால் ...
ஓர் தொழிலே கொண்டால் .
உலகிற் சுவையேது ? உய்வேது ?
தூற்றுபவர்களே !
டாட்டா...டாட்டா ! வருகிறேன் !
செல்கிறேன் என் வழி !
என்றோ ஓர் நாள் ..
எங்கோ ஓர் உயிர்
என்னில் தன்னையும் காணும் எனும்
மாறாத நம்பிக்கை என்னை நகர்த்தட்டும் ...!
-----சந்திர கலாதர்
[ ஏப்ரல் 1991 ]
No comments:
Post a Comment