Tuesday, June 7, 2011

PLAY ON YOUR VEENAI , MY DEAR !

என் அன்பே ! உன் வீணையை மீட்டு !

என் அன்பே !
அழகிய வீணையை மென்கரங்களில் ஏந்திடு..
தெய்வீக வீணையின் நுண் நரம்புகள் மீது
உன் தளிர் விரல்களை மென்மையாய் உலவவிடு..
ஓ..என்னே இவ்வினிய மனோகர கீதம் !
என் இமைகள் மென்மையாய்க் கிறங்கி இறங்குகின்றன ..
என் சதை ,எனது என்பும்கூட எல்லாம் மெதுவாய்
வீணையிலிருந்து விரியும் தேவ நாத மருவுதலில் மென்மையுருகின்றன
உன் இசையின் இனிய ஆலிங்கனத்தால் --அல்ல .அல்ல..
மகோன்னத மகிழ்வின் கொடிய வேதனையில் ....
என் மனம் மிகத் துன்புற்றுப் பாம்பென நெளிகிறது .
வார்த்தைகளே ! எங்கே ஒளிந்தீர்கள் ?
என் உணர்வுகள் மொழிப் படகுதனைத் தேடிப் பரிதவிக்கின்றனவே !
உன் வீணா நாதம் என் இதயத்தையே இறுக்குவதோ ?
என் நெஞ்செல்லாம் வேதனை--
என் ஆன்மா இசை வெம்மையில் அருவமாகிறதோ ?
பிரியம் உள்ளவளே !
யாது உந்தன் பாடல் , சொல் ? எது அதன் ராகம் ?
ஒன்றும் புரியாது நிற்கிறேன் .
என் இசை அறிவு ஆழமற்றதம்மா !
மிதமிஞ்சி இசை மது அருந்தி
தன்வயம் இழந்து பலவீனன் ஆகிவிட்டேன் .
ஒரு பைத்தியத்தின் உச்சத்தில் என் மனம் இன்று நடமிடுகிறது ..
நடமிட்டபடியே உன் இசையை --
அது தன் பாதையின் வளைவு சுழிவுகளில் நேர்த்தியாய் ஊர்கையில்
ஏற்ற இறக்கங்களில் அருமையாய் ஏறி வழுக்கிச் செல்கையில் -
விடாது பின் தொடர்கிறது ..
இருப்பினும் இசையின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாது
அப்பாதையில் விழுந்து தடுமாறுகிறது;
இருப்பினும் பெரு மூச்சு உயிர்த்தபடி பாதை தொடர்கிறது ..
அன்பே ! வீணா நாதத்தின் முந்தானை விளிம்பில்
இறுக்க என்னைக் கட்டி விடு .
உனது கானம் --அது செல்லும் உலகமெல்லாம் --
ஏறும் மலை முகடுகளுக்கெல்லாம் -
சறுக்கி வீழும் ரகசிய ஆழங்களுக்கேல்லாம் -
மகிழ்ச்சியாய் நீந்தும் அலைகள் மீதெல்லாம் -
ஆகாய வீதியில் அழகாய்ப் பறக்கும் இடமெல்லாம் --
உல்லாசமாய் நீந்தும் சிற்றோடைகளில் எல்லாம் --
ஆனந்த உவகையில் தாவும் வெள்ளி அருவி மீதெல்லாம்
என்னை இழுத்துச் செல்லட்டும்;
உயர் கம்பத்தின் உச்சியில் விளையாட்டுத்தனம் செய்யும்
உல்லாசக் காற்றுடன் சுருதி தவறாது
ஜதி பிசகாது நடமிடும் பட்டுக் கொடிதனைப்போல்
என் ஆன்மா ஆடித் திரியட்டும்;
அலை புரண்டுவரும் காற்றோடு
அழகாய் விளையாடும் பட்டம் என
உன் தெய்வ இசையில் மயங்கித்
துன்பமிகு இப்புவி இறங்காது
உயர் வானிலேயே மிதந்து திரியட்டும்;
ஓ..என்அன்பே !
வீணை இசையை முறித்து விடாதே ..
அந்நொடியே என் இதயம் சுக்கு நூறாகி விடும் .
மென்தளிர் விரல்கள் நுண் நரம்புகளில்
எப்போதும் நர்த்தனமிடட்டும் ..
உன் இசைநடம் முடிவற்றதாகட்டும் ..
ஓய்வற்றதாய் ,மரணம் அற்றதாய்
ஸ்படிக ரூபமாய் மிளிரட்டும் ..
நரம்புகளை வலிவாக மீட்டு ..
மென்மையாக வருடு ..மெதுவாய் உறவாடு ..
விரைவாய் விளையாடு ..
ஓ.வீணை நரம்புகளின் எல்லைகளிடை
எல்லாவிதமாயும் மீட்டு .
ஓர் நொடியில் ஆயிரம் விந்தைகள் புரி ..
வீணை நரம்புகளின் மேலும் கீழுமென
என் நெஞ்சைத் தாலாட்டு .
உனது ராகம் விரைந்து பாயட்டும் ..
அதன் சுழல்களில் என்னை உருட்டட்டும் .
வெட்கமின்றி என் மனம்
அவ்வலிதனில்அழுது தவிக்க வேண்டும்;
கானகத்துப் புயல்போல் கர்ஜிக்கட்டும் உன் ராகம்..
அல்லது மின்னற்கீற்றுச் சொடுக்குகளாய்
என்னைப் பிய்த்து எறியட்டும்.
இடி முழக்கம்போல் கம்பீரமாய் உருண்டு திரியட்டும் ..
அங்ஙனம் இல்லையேல் ..என் உயிரின் உயிரே !
உன் இசை அமைதியாய் அடக்கமாய் நடை பயிலட்டும் ..
அல்லது வாசத் தென்றலாய்த் தவழட்டும் ..
அல்லது மௌனச் சிற்றலை விரித்து
தவழ்ந்து ஊர்ந்து நழுவிச் செல்லட்டும்
தெய்வீக இசையே !
என்னை ஓர் நொடி இனிமைத் துள்ளலாக்கி
மறுநொடி தவிப்பில் புதைத்து
பேரானந்தத்தில் பறக்கச் செய்து
மறுநொடி துயரத்தில் தள்ளி
ஆகாயத்தில் உயர்த்தி உடன் தரையில் வீசி எறிந்து .
இறுக்க ஆலிங்கனம் செய்து
மறுநொடி இடுப்பொடிய எற்றி
திக்கு முக்காடச் செய்கிறதே !
நிறுத்தி விடாதே !
நரம்போடு விரல்கள் பிரியா இணையாகட்டும் ..
விண்ணில் பறந்து கொண்டிருக்கிறேன் ..
இறக்கைகளில் ரத்தக் காயங்கள் வேண்டாம் ..
என் அன்பே !அவ்விரல்களுக்கு ஓய்வு வேண்டாம்;
வீணையை அவ்வளவு இனிமையாகப் பேச வைக்கும்
அவ்விரல்கள் இமைக்கவும் வேண்டாம் ..
என் ஆன்மா இளகி உருகி
பேரானந்தத்தில் கரைந்து ஒன்றி மறையும்வரை
உன் விரல்கள் ஓய வேண்டாம்
என் அன்பே !


.....சந்திர கலாதர்

No comments:

Post a Comment