உன்னத இதயமே ..வாராயோ !
எத்தனை எத்தனை அச்சுறுத்தும் ரகசியங்கள் !
ஒளி உமிழ் கற்பனைகள் !
எண்ண மண மலர்கள் !
கண்ணீர் மல்கும் சோக நினைவுகள் !
ஓ !
ஆழப் புதையுண்ட என் மனதின்
அச்சுறுத்தும் அறைகளின்
கரிய மூலை முடுக்குகளில்
மறைத்தும் புதைத்தும் வைக்கப்பட்டுள்ளன --
ஓ ! நினைவுகளே !
நீங்கள் ஏன் மக்கிப் போவதில்லை ?
உயர்த்திய தன் கரத்தில்
அலைபடாது எரியும்
ஓர் கருணைத் தீபம் ஏந்தி --
உயிர் மூச்சே மென் தென்றலாய்
இதயத்தை இதமாய்த் தடவி --
உண்மை அன்பின் வெம்மையில்
என் சந்தேகங்களைக் கரைத்து
ரகசியங்களை வாரி இறைத்திடா
உத்தம நெஞ்சோடு --
நள்ளிரவு வேளைதனில்
பைத்தியமாய் மனம்
பரபரக்கும் வேளையில் --
உள்ளங்கையோடு
தேற்றிடும் தன் கை பிணைத்து --
என் மன இருட் குகைகளைப்
பொறுமையாய் ஆராய விழையும் --
ஓ !
அந்த உன்னத இதயத்திற்காக
எப்படி ஏங்கித் துடிக்கிறேன் !
-----சந்திர கலாதர்
No comments:
Post a Comment