கவலைக்கு இங்கே நேரமில்லை ...
வயலினில் முளைத்திடப் பிடுங்கியே எறிவர்
வரப்பினில் வளர்ந்தால் மிதித்துத் துவைப்பர்
அகன்வெளி தழைத்திடில் ஆடுமாடு அழிக்கும்
பூங்காவில் எழுந்தால் படுத்துப் புரள்வர்
பலகோடிக் கவலைகள் பசும்புற்கள் வாழ்விலே--
வாழ்வோ சிறுபோழ்து மறப்போம் அவையெல்லாம் !
குலவிடும் காற்றோடு இன்நகை பகிர்வோம் !
இதமான அணைப்பில் இனிக்கச் சிரிப்போம் !
காற்றோடு இணைந்து காதலில் ஆடுவோம் !
காலைச் சுடரில் கனகங்கள் பெறுவோம் !
நிலவின் குளிர்வில் முத்துக்கள் அணிவோம் !
சாவின் விளிம்பில் சாகசங்கள் செய்வோம் !
கோலங்கள் புரிந்தே நழுவுது நற்காலம் --
தென்றலின் தழுவலில் இலைமங்கையர் நடனம் --
ஆடவும் பாடவும் சிரிப்பினில் வாழ்வை
முடித்திட நாட்டமும் மானிட விரும்பின்
நாடியே அழைப்போம் ஓடியே வருவாய் !
கவலையைக் கதைப்பின் யாமதைச் சகியோம் --
கவலைகள் கவலைகள் நாளெல்லாம் கவலைகள் !
என்றுதான் வாழ்வது ? சற்று நீ சிந்தி--
சிரிப்போடு சாவினை ஏற்றிடு மனிதா !
தயக்கங்கள் தழைப்பின் இருகாற் பாய்ச்சலில்
இங்கிருந்து அகன்று துயர்வழிச் சேர்வாய் !
விதியிடும் வீதியில் கலங்கிய கண்களும்
விம்மிடும் நெஞ்சுமாய்த் தளர்நடை பயில்வாய்
குழுமியே நிற்கும் உன்மனை நோக்கியே !
அதோ பார் .!
சூரியதேவன் கட்டித்தழுவ கோடித் தொலைவை
நொடிப் பொழுதினில் கடந்து வருகின்றான் !
காற்றுத் தேவன் காதலாகிக் கடுகியே வருகின்றான் !
நேரம் இனி உரைகளுக்கு இல்லை !
லாலல் லாலல் லாலல் லாலல் லாலல் லாலல்லா..!
------------சந்திர கலாதர்
புற்பரப்பின் மேற்பரப்பில் பற்பல கற்பனை
ReplyDeleteசொற்றொடரில் கற்றவை, அற்புதம் சொற்பதம்
கற்பரப்பினோடும் சிற்சில நேரம் உறவாடும்
சேற்றினுள்ளும் பிறக்கும் புல்லின் மொழியறிந்த புலவரே!
இனி ஓரறிவு படைத்தவரென்றும், ஒன்றும் தெரியாதென்றும் இருப்பவர்களை புல்லுக்கு நிகராக பேசுவது ஓயும்.
காலனை புல்லாய் மதிக்கிறேன் என்று கூறிய பாரதியின் கற்பனையை விட விழுமியது உங்கள் ஜீவ காருண்யம். .
- Baskar Balasubramanian